நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகத் தான் இந்தப் போராட்டக் களத்திற்கு வந்திருப்பதாக நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார். மேலும், இந்த இடத்தை அரசியல் ரீதியாகப் பயன்படுத்துபவர்கள்தான் உண்மையான கோமாளிகள் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.

​தொடர்ந்து பேசிய அவர், தான் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்றும், அவரது ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சியைப் பார்த்துவிட்டுதான் நேராக இங்கேயே வந்ததாகவும் கூறினார். அவர் அவ்வாறு கூறியதும், அங்கிருந்த போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

​சினிமா விஷயத்தை இங்குப் பேசக்கூடாது எனக் கூறி, அவரை அங்கிருந்து பேசவிடாமல் விரட்ட முயன்றனர். இதனால் மிகுந்த கோபமடைந்த சனம் ஷெட்டி, “இது ஒன்றும் டெமாக்ரசி கிடையாது; நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேசுவதற்கு முழு சுதந்திரம் இருக்கிறது” என ஆவேசமாகப் பேசினார்.

​”இப்போது புரிகிறதா நான் எந்த ஏஜெண்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று? மாணவர்கள் போராட்டம் நடத்தும் போது அவர்களுக்கு ஆதரவாக மட்டும்தான் என்னால் பேச முடியும். எனக்கு என்ன பேசத் தோன்றுகிறதோ அதைத்தான் நான் பேசுவேன்; யாரோ சொல்லிக் கேட்டு நான் இங்கு வரவில்லை, நானாகத்தான் வந்திருக்கிறேன்” என்று கோபத்துடன் குரலை உயர்த்தினார்.

​அவரது இந்த அதிரடிப் பேச்சைத் தொடர்ந்து, கோபமடைந்த அங்கிருந்தவர்கள் அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கி, அவரை உடனடியாகப் போராட்டக் களத்திலிருந்து வெளியேறச் செய்தனர். இச்சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.