நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் எதிர்காலத்தைக் காக்கவும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வீதிகளில் இறங்கி போராடும் இந்த இளைஞர்களின் குரல், இந்திய அளவிலான மிகப்பெரிய மாணவர் இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
அதேசமயம், இந்த தீவிரமான போராட்டத்திற்கு மத்தியிலும், ஜென்-ஜி (Gen-Z) தலைமுறை இளைஞர்கள் தங்களது சமூக வலைத்தளங்களின் வாயிலாக ஆதரவு திரட்டும் விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) தளங்களில் “புரோட்டஸ்ட் டேட்” என்ற புதிய சொல் தற்போது மிக வேகமாக டிரெண்டாகி வருகிறது.
View this post on Instagram
அதாவது, “போராட்டத்திற்கு என்னுடன் துணையாக வரப்போவது யார்?” என்றும், “இருவரும் சேர்ந்து காவல்துறையினரின் லத்தி அடிகளை வாங்குவோமா?” என்றும் நகைச்சுவை கலந்து, அதேசமயம் தங்களின் கவலையை வெளிப்படுத்தும் வகையில் இளைஞர்கள் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய தங்களுக்கு ஒரு துணை தேவை என்பதை, தற்கால கலாச்சாரத்திற்கு ஏற்ப இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
போராட்டம் என்றாலே வன்முறையும் பதற்றமும் நிறைந்தது என்ற பிம்பத்தை உடைத்து, இணைய தலைமுறையினர் தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த இத்தகைய புதுமையான வழியைக் கையாண்டு வருகின்றனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தின் தீவிரத்தை மேலும் பலரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் உதவியுள்ளது.
