தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக அரசு தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 22-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், நேற்று (பிப்.13) மதுரையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜன் கண்ணப்பன், தேர்தல் குறித்து மிக முக்கியமான மற்றும் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

​அவர் பேசுகையில், “வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மட்டும் தனியாக 170 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 160 இடங்களில் திமுக அமோக வெற்றி பெறும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் தொடங்காத நிலையில், அமைச்சரே நேரடியாக ‘170 தொகுதிகள்’ என்று குறிப்பிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளுக்குக் குறைந்த இடங்களே ஒதுக்கப்படுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும், திமுக தலைமையின் இறுதி முடிவே இறுதியானது என்றாலும், அமைச்சரின் இந்த “160 சீட்” வெற்றி கணிப்பு உடன்பிறப்புகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.