சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பெரும் சோகம் நிலவியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிமாநிலத்தில் இருந்து வந்திருந்த சூரஜ் என்ற நபர், திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கரூரில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் ஆயுதமாக மாறியுள்ளது. இது குறித்து அதிமுக-வின் கோவை சத்யன் தனது எக்ஸ் (X) பக்கத்தில், “தவெக கூட்டத்திற்குப் போனால் இனிமேல் கையோடு சவப்பெட்டியையும் கொண்டு போக வேண்டும் என்பது உறுதி” என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “உயிரிழந்தவர்கள் குடும்பத்தைச் சந்திக்காத விஜய், அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடப்பதை எப்படிப் பார்க்கிறார்?” எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
