மின் நுகர்வோர்களுக்குக் கூடுதல் கட்டணம் மற்றும் தவறான மின் கட்டணப் பட்டியல் வழங்கப்படுவதைத் தவிர்க்க, நெல்லை மண்டல மின்சார வாரியம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மீட்டர் கணக்கெடுப்பு மற்றும் பில்லிங் முறைகளில் ஏற்படும் குளறுபடிகளே இதற்கு முக்கியக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு மின்சாரப் பிரிவிலும் திடீர் ஆய்வு மற்றும் பெருமளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு மண்டலத் தலைமைப் பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.

பணியில் கவனக்குறைவாகச் செயல்படும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், நுகர்வோர்களுக்குப் பிழையற்ற மின் கட்டணப் பட்டியலை வழங்கி அவர்களின் அதிருப்தியைப் போக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.