மருத்துவப் படிப்புக்காக அக்காவிடம் வாங்கிய ரூ.5 லட்சம் பணத்தைத் திரும்பக் கேட்டதால், அக்கா மகளுக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தஞ்சாவூரில் வைத்து சென்னை போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர்,  காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது சகோதரரான செல்வவேல் என்பவரின் மருத்துவப் படிப்புச் செலவிற்காக ரூ.5 லட்சம் நிதியுதவி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். செல்வவேல் படித்து முடித்து மருத்துவரானதும், தனது மகளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே அந்தப் பணத்தைக் கொடுத்ததாக அவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.

ஆனால், மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து டாக்டரான செல்வவேல், தான் கொடுத்த வாக்குறுதியை முற்றிலும் மீறியுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த அக்கா, தான் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தையாவது திரும்பத் தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். பணத்தைத் தராமல் காலம் கடத்தி வந்த செல்வவேல், ஒரு கட்டத்தில் அக்கா மகளின் செல்போன் எண்ணிற்கு ஆபாசப் புகைப்படங்களையும், அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். மேலும், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக தாய் மற்றும் மகள் இருவரிடமும் தகாத முறையில் பேசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மகளின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என செல்வவேல் மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த தாய், போலீசாரை நாடினார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். விசாரணையில், 40 வயதான செல்வவேல் சமீபத்தில்தான் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று, மருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சைக்கு விரைந்த தனிப்படை போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் இவர் மீது ஏற்கனவே தஞ்சை காவல் நிலையத்தில் ஒரு குற்ற வழக்கு இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.