திருத்தணி அருகே உள்ள அய்யனேரியில், திரௌபதி அம்மன் கோயிலில் திருடப்பட்டதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கத் தாலி, கருவறைக்குள்ளேயே கண்டெடுக்கப்பட்ட விசித்திரமான சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போனதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த திடீர் திருப்பம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயிலின் பூசாரி மகேஸ்வரிக்கு திடீரென அருள் வந்து, அவர் கோயிலைச் சுற்றி ஓடி கருவறைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கையில் அந்தத் தங்கத் தாலியுடன் வெளியே வந்த அவர், “நகை எங்கும் திருடு போகவில்லை” என்று கூறி அருள் வந்து ஆடியுள்ளார். பூசாரியின் இந்தச் செயலால் மெய்சிலிர்த்துப் போன பக்தர்கள், ‘கோவிந்தா.. கோவிந்தா’ என்று பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர்.