ஆசாத் ஹிந்த் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்போன் திருட முயன்றதாகக் கூறப்பட்ட ஒருவரை, சக பயணி ஓடும் ரயிலில் இருந்து வெளியே உதைத்து தள்ளிய அதிர்ச்சி சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் உர்குரா – மந்தர் ரயில்வே பிரிவுக்கு இடையே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயிலில் பயணித்தவரிடம் செல்போன் திருடிவிட்டு தப்பிக்க முயன்ற நபரை, சக பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இணையத்தில் வெளியான அந்த அதிர்ச்சி வீடியோவில், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயிலின் வாசற்படி அருகே தப்பிக்க முயன்ற நபர் தொங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அப்போது, பெட்டியின் உள்ளே இருந்த பயணி ஒருவர் அந்த நபரை பலமாக உதைக்க, அவர் நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுகிறார். இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் சக பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடிக்க, அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உடனடியாக களத்தில் இறங்கிய ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது. இதில் ஓடும் ரயிலில் இருந்து நபரை உதைத்து தள்ளிய ஆர்.சுரேஷ் குமார் என்பவரைக் கண்டறிந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறுபுறம், ரயிலில் இருந்து கீழே விழுந்து காயமடைந்ததாகக் கருதப்படும் செல்போன் திருடனைத் தேடும் பணியில் சிறப்பு  படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வழக்கின் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வைரல் வீடியோ முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ரயில்களில் பயணிக்கும் போது சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சக மனிதர்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற சம்பவங்கள் பயணிகள் பாதுகாப்பிற்கு பெரும் கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளன.