ஃபிஃபா உலகக் கோப்பை 2026 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தின் முடிவில், ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஆனால், போட்டி முடிந்து கோப்பையை உயர்த்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் மைதானத்தில் நிகழ்ந்த ஒரு எதிர்பாராத சம்பவம், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் உலகளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி, சக வீரர்களுடன் சேர்ந்து உலகக் கோப்பையை கையில் ஏந்தி ஒட்டுமொத்த உலகமும் பார்க்கக் கொண்டாடத் தயாரானார். அப்போது, ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மேடையில் இருந்தார். ரோட்ரி கோப்பையை உயர்த்துவதற்குச் சில நொடிகள் இருந்தபோது, ட்ரம்ப்பை நோக்கி ஏதோ சைகை செய்து பேசிய காட்சி கேமராக்களில் பதிவானது. ட்ரம்ப்பை சற்று தள்ளி நகருமாறு ரோட்ரி கேட்டுக் கொண்டதாக இணையத்தில் வீடியோக்கள் வைரலாகத் தொடங்கின.
அதிபர் ட்ரம்ப் மேடையின் நடுவில் நின்றுகொண்டிருந்ததால், வரலாற்று சிறப்புமிக்க அந்த புகைப்படத் தருணத்திற்கு அது இடையூறாக இருந்ததாகப் பார்க்கப்பட்டது. இதனால் ரோட்ரி நேரடியாகவே அவரிடம் நகருமாறு கூறியிருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலவிதமாக விவாதிக்கத் தொடங்கினர். நிலைமையை உடனடியாக உணர்ந்த ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ, சட்டென்று தலையிட்டு அதிபர் ட்ரம்ப்பை மேடையின் மையப்பகுதியிலிருந்து சற்று பக்கவாட்டிற்கு வழிநடத்தி அழைத்துச் சென்றார்.
இந்த சிறு தாமதத்திற்குப் பிறகு, ஸ்பெயின் அணி வீரர்கள் தங்களுக்குரிய முழு இடத்தை அடைந்து, உலகக் கோப்பையை விண்ணதிர உயர்த்தி தங்களின் வரலாற்று வெற்றியை விமரிசையாகக் கொண்டாடினர். இந்தச் சம்பவம் குறித்து கேப்டன் ரோட்ரி தரப்பில் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றாலும், 2026 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்களால் அதிகம் பேசப்படும் ஒரு தருணமாக இது மாறியுள்ளது.
