தமிழகத்தில் தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியிலும் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்குள்ள கோயிலில் சிறப்பு பூஜை நடத்துவதற்காக பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் திரண்டிருந்தனர்.
விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த வேளையில், தவெக நகரச் செயலாளர் ரமேஷின் தாயார் முனியம்மாள் திடீரென விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தனது மகனை, இந்த அரசு விழாவிற்கு நிர்வாகிகள் முறையாக அழைக்கவில்லை என்றும், அவரைப் புறக்கணிப்பதாகவும் கூறி அங்கிருந்த நிர்வாகிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொது இடத்தில் தாயார் சண்டையிட்ட இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக, தவெக நகரச் செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள உருக்கமான ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் பேசியுள்ள அவர், “கடந்த 28 வருடங்களாக தளபதி விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் போஸ்டர் ஒட்டி உழைத்திருக்கிறேன். ஆனால், தற்போது என்னை கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு முறையாக அழைப்பதில்லை” என்று கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆடியோவின் இறுதியில் அவர் வெளியிட்டுள்ள மரண வாக்குமூலம் போன்ற வாசகங்கள் தவெக தலைமைக்கே பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. “ஒருவேளை நான் மன உளைச்சலால் இறந்தால், அதற்கு தவெக-வைச் சேர்ந்த இந்த குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் காரணம்” என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயர்களைப் பகிரங்கமாகப் பட்டியலிட்டுள்ளார். அமைச்சர் பிறந்தநாள் விழாவில் தொடங்கிய இந்த உட்கட்சி மோதலும், நகரச் செயலாளரின் தற்கொலை மிரட்டல் ஆடியோவும் தர்மபுரி தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
