தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு, அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குத் திடீர் ஆய்வு மேற்கொள்வதும், அது தொடர்பான ‘ரீல்ஸ்’ வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தொடர்கதையாகி வந்தது. இந்த விவகாரம் அண்மையில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், விளம்பர நோக்கத்திற்காகவும் அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தேவையற்ற ஆய்வுகளில் ஈடுபடக் கூடாது என்றும், குறிப்பாக ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிடக் கூடாது என்றும் முதல்வர் விஜய் அண்மையில் மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதனை மீறி செயல்பட்டிருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SathiyamTv (@sathiyamnews)

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ. கஜேந்திரன், கடந்த சில நாட்களுக்கு முன்பாக தர்மபுரியில் உள்ள பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பள்ளிக்குச் சென்ற அவர், வகுப்பறைகளுக்குள் நுழைந்து மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார். அதுமட்டுமன்றி, பள்ளியின் சத்துணவுக்கூடத்திற்குச் சென்று அங்குள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்துள்ளார்.

இதற்கிடையே, அப்பகுதியில் சத்துணவு சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவ, மாணவிகளை எம்.எல்.ஏ. கஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். இந்த ஆய்வுகள் மற்றும் மருத்துவமனை சந்திப்புகள் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. முதல்வர் விஜய்யின் தடையையும் மீறி இவ்வாறு வீடியோ வெளியிட்டிருப்பது கட்சிக்குள்ளும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.