தூத்துக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், தமிழக வெற்றிக் கழக அரசு சத்தமில்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேடைகளில் வெறும் வசனங்களை மட்டுமே பேசிவிட்டு, மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளில் தற்போதைய அரசு அலட்சியம் காட்டி வருவதாக அவர் தனது பேச்சில் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, 500 யூனிட்டிற்கு குறைவாகப் மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், இதை நீங்கள் சற்று கணக்கு போட்டுப் பார்த்தால் தான் உண்மை புரியும். இந்த இலவச அறிவிப்பின் பின்னணியில், சத்தமில்லாமல் மின்கட்டண விலை தான் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் 100 யூனிட் கட்டணம் குறைக்கப்பட்ட போது மின் கட்டணம் எவ்வளவு இருந்தது, தற்போது தவெக ஆட்சியில் எவ்வளவு இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பாருங்கள். தற்போது கிட்டத்தட்ட ஒரு யூனிட்டிற்கு 4 ரூபாய் முதல் 50 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு யூனிட்டிற்கான கட்டணம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வரை சத்தமில்லாமல் உயர்த்தப்பட்டு, மக்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்பட்டுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு மின்வெட்டு என்பது ஒரு சாதாரணப் பிரச்சினையாக மாறிவிட்டது என்றும் கீதா ஜீவன் குறிப்பிட்டார். மின்வெட்டுத் தொடர்பாக அரசிடம் கேள்வி கேட்கவோ, மின்சார வாரியத்தில் புகார் அளிக்கவோ முடியாத ஒரு அவல நிலை நீடிப்பதாகக் கூறிய அவர், அந்தப் பிரச்சினையைச் சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். மேடைகளில் வெறும் ‘பஞ்ச் டயலாக்’ பேசிவிட்டுச் செல்லும் இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்றார்.