தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த அரக்கத்தனம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தம்பி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இதனால் தனது தம்பியின் மனைவியையும் ராஜா இரண்டாவது தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குத் தற்போது 10 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
குடும்பப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய ராஜா, கடந்த இரண்டு வருடங்களாகத் தனது 10 வயது மகளுக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அந்தச் சிறுமி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தந்தையின் இந்த அத்துமீறலைத் தாங்க முடியாமல், சிறுமி அழுதுகொண்டே தனது தாயிடம் நடந்த உண்மைகளைக் கூறி கதறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாகத் தனது கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார்.
மகளைக் காப்பாற்றத் துடித்த மனைவியின் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் இரண்டாவது மனைவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதனால் அந்தப் பெண், காவல் நிலையத்திற்குச் சென்று தனது கணவரின் கொடூரச் செயல்கள் குறித்துப் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உண்மை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரை போலீஸார் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
