ஒரே நாளில் 1.31 கோடி வங்கிக் கணக்குகளுக்கு மிகவும் ரகசியமாகவும் நேர்த்தியாகவும் பணத்தைச் செலுத்திய திமுக அரசு, அதே வேகத்தையும் அக்கறையையும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் ஏன் காட்டவில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலமான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைக் குளறுபடி இல்லாமல் நடத்துவதிலோ அல்லது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலோ இந்த வேகம் காணப்படவில்லை என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
நாள்தோறும் நடக்கும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றுவதில் காட்டாத வேகம், தேர்தலுக்காகப் பணத்தை விநியோகிப்பதில் மட்டும் தெரிவது ஏன்? என்று அவர் சாடியுள்ளார். மேலும், இஸ்லாமியச் சிறைவாசிகள் விடுதலை போன்ற நீண்டகாலக் கோரிக்கைகளைச் செவிமடுக்காத அரசு, தேர்தல் வந்துவிட்டதால் மட்டும் நிதி சிக்கல் இல்லை எனப் பொய் நாடகமாடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நிதி இல்லை என்று கூறி வந்த அரசுக்குத் தேர்தல் நேரத்தில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என அவர் வினவியுள்ளார்.
