“டாக்டர்” என்றாலே சமூகத்தில் ஒரு கௌரவம், கையில் நிறைய பணம் இருக்கும் என்ற பிம்பம் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால், அதன் பின்னாலுள்ள வலி நிறைந்த வாழ்க்கையை உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளார் 28 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர்.
2 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வரும் அவர், “இந்தக் கடனை வைத்துக்கொண்டு என் மகளை யாருக்காவது மணம் முடித்துக் கொடுப்பார்களா?” என்று இணையத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு, மருத்துவத் துறையின் மறுபக்கத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
முதல் தலைமுறை மருத்துவரான இவர், தந்தை வற்புறுத்தியதால் கல்விக் கடன் பெற்று எம்.பி.பி.எஸ் படித்துள்ளார். படிக்கும்போதே கட்டணம் கட்டத் தாமதமானதால் ஒரு வருடம் வீணாகியுள்ளது. படிப்பை முடித்த பிறகு, 24 மணி நேரமும் ஓயாத உழைப்பு, ஆனால் கையில் கிடைப்பதோ சொற்பமான சம்பளம்.
அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால், மீண்டும் கடன் வாங்கி தனியார் கல்லூரியில் பி.ஜி படித்துள்ளார். இப்போது 11 வருட போராட்டத்திற்குப் பிறகு, கையில் பட்டமும், கூடவே 2 கோடி ரூபாய் கடனும் மட்டுமே மிஞ்சியுள்ளது.
கடன்களின் பட்டியல் இதோ:
கல்விக் கடன்: ₹69 லட்சம் (மாதம் ₹78,000 இ.எம்.ஐ)
வீடு மற்றும் கார் கடன்: மாதம் ₹95,000 இ.எம்.ஐ
உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் வாங்கிய கடன்: ₹26 லட்சம்
கிரெடிட் கார்டு கடன்: ₹4-5 லட்சம்
வருமானம் என்று பார்த்தால், இவரும் இவரது சகோதரியும் சேர்ந்து மாதம் சுமார் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஈட்டுகிறார்கள். “இந்தக் கடனை அடைப்பதற்கே என் வாழ்நாள் முழுவதும் போய்விடுமோ என்ற அச்சம் என்னை நிம்மதியாகத் தூங்க விடவில்லை.
ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்ற போலியான கௌரவத்தைத் தவிர, என் பெயரில் சொத்து என்று எதுவுமே இல்லை. இந்தச் சூழலில் என் மகளை மணம் முடிக்க யார் முன் வருவார்கள்?” என்று அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். “உங்களுக்கு இன்னும் நீண்ட எதிர்காலம் இருக்கிறது, அனுபவம் கூடக் கூட வருமானம் அதிகரிக்கும், கவலைப்படாதீர்கள்” என்றும், “வெளிநாடுகளில் உள்ள மருத்துவ வாய்ப்புகளை முயலுங்கள்” என்றும் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
கஷ்டமான பாதையில் இருந்தாலும், மனம் தளராமல் உழைத்தால் இந்த கடன்களிலிருந்து மீண்டு வர முடியும் என்று அவருக்குப் பலர் நம்பிக்கையூட்டி வருகின்றனர்.
