சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை இரவு மணிமாறன் மதுபோதையில் வீட்டிற்கு வந்தபோது மீண்டும் இதே விவகாரம் தொடர்பாகத் தகராறு வெடித்தது.

இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன், வீட்டில் இருந்த மீன் வெட்டும் கத்தியால் தனது மனைவி வினிதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுத் தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரர் முருகனுக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி நகர் போலீசார், மணிமாறனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.