உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அபர்ணா ரஜத் கௌஷிக், சமூக வலைதளங்களில் உருவக் கேலி மற்றும் ஆபாசக் கருத்துகளுக்கு உள்ளானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது மிர்சாபூர் காவல்துறையினர் அண்மையில் குற்றவாளி ஒருவரைக் கைது செய்த வெற்றிகரமான நடவடிக்கை குறித்த வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர். அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி அபர்ணா கௌஷிக்கின் தொழில்முறை நடவடிக்கையைப் பாராட்டுவதற்குப் பதிலாக, பலரும் அவரது தோற்றம் குறித்து அநாகரிகமான மற்றும் பாலின ரீதியான அவதூறு கருத்துகளைப் பதிவிட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pro Cell Mirzapur (@mirzapur.police)

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் குறிப்பிட்ட வீடியோவின் ‘கமெண்ட்’ பகுதியை காவல்துறை முடக்கியது. “ஒரு உயர்மட்ட பெண் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன?” எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

யார் இந்த அபர்ணா கௌஷிக் என்று பார்ப்போம். கடந்த  2018-ஆம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான அபர்ணா கௌஷிக், ஒரு சிறந்த நிர்வாகியாகவும் நேர்மையான அதிகாரியாகவும் அறியப்படுபவர். ராம்பூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பள்ளிப் படிப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர். அலகாபாத் என்.ஐ.டி-யில் பி.டெக் முடித்த இவர், குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 18 லட்சம் ஊதியத்தில் பணியாற்றி வந்தார். எனினும், மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது பணியைத் துறந்து ஐ.பி.எஸ் அதிகாரியானார்.

அபர்ணா பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை இயற்கை எய்தினார். அவரது தாய் பிரீதி கௌதம், மிகுந்த போராட்டங்களுக்கு இடையே அவரை ஒரு தைரியமான பெண்ணாக வளர்த்தெடுத்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு ரஜத் கௌஷிக் என்பவரை மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்ட அபர்ணா, திருமணத்திற்காகச் சேமித்த பணத்தைப் பெண்களின் சுயஉதவிக் குழுக்களுக்கு நன்கொடையாக வழங்கிப் பலரது பாராட்டுகளைப் பெற்றவர்.

முன்னதாக அமேதி, லக்னோ, காஸ்கஞ்ச் மற்றும் ஔரையா ஆகிய மாவட்டங்களில் பணியாற்றித் தனது திறமையை நிரூபித்துள்ள இவருக்கு நேர்ந்த இந்த இணையவழித் தொல்லை, சமூக வலைதளங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.