ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் செய்வதாகக் கூறி, இளம்பெண் ஒருவரை மூன்றாண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற மெர்ச்சண்ட் நேவி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அதிர்ச்சியூட்டும் வகையில் 58 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாசிக் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ ஈஷானேஸ்வர் மகாதேவ் கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருப்பவர் அசோக் குமார் காரத். ‘கேப்டன்’ என்று தன்னையே அழைத்துக்கொள்ளும் இவர், ஓய்வுபெற்ற மெர்ச்சண்ட் நேவி அதிகாரியாவார். இவர் கடந்த 2022 நவம்பர் முதல் 2025 டிசம்பர் வரை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
தனது அலுவலகத்திற்கு அந்தப் பெண்ணை வரவழைத்த அசோக் குமார், அவரது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார். பரிகாரம் செய்வதாகக் கூறி, மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கணவரைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
போலீசார் நடத்திய சோதனையில், அசோக் குமாரிடமிருந்து ஒரு பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 58 வீடியோக்கள் இருந்தன. அவற்றில் சில ஆபாசமானவை என்றும், மற்றவை அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் அவர் தொடர்பில் இருந்ததைக் காட்டும் வீடியோக்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். சோதிடர் என்ற பெயரில் பல அரசியல் பிரமுகர்கள் இவரைச் சந்தித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அசோக் குமார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளிலும், மகாராஷ்டிராவின் ‘பில்லி சூனியம் மற்றும் அமானுஷ்ய நடைமுறைகள் தடுப்புச் சட்டத்தின்’ கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
