இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சமீபகாலமாக தனது விளையாட்டுத் திறன் மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கை முறையாலும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறார். டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், தமக்குத் தாமே ஒரு விலையுயர்ந்த பரிசை அவர் அளித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சொகுசு கார் நிறுவனமான பெராரியின் ’12 சிலிண்ட்ரி’ (Ferrari 12 Cilindri) ரக காரை ஹர்திக் பாண்டியா வாங்கியுள்ளார். இதன் இந்திய சந்தை மதிப்பு சுமார் 12 கோடி ரூபாய் எனத் தெரிகிறது. கருப்பு நிறத்தில் (Nero Daytona Black) மின்னும் இந்த கார், நவீன வசதிகளுடன் கிளாசிக் வடிவமைப்பையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய கார் வாங்கியதை விட, அதற்கு நடத்தப்பட்ட பாரம்பரிய பூஜையே இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், அவர் காரின் உள்ளே அமர்ந்திருக்க, அவரது காதலியும் நடிகையுமான மாஹிகா ஷர்மா காருக்கு முன்பாக நின்று தேங்காய் உடைத்து, திலகமிட்டு முறைப்படி பூஜை செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னரே மும்பை சாலைகளில் இந்த ஜோடி புதிய காரில் வலம் வந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது இந்த பூஜை வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
View this post on Instagram
ஹர்திக் பாண்டியாவின் கார் சேகரிப்பிலேயே மிகவும் மதிப்புமிக்க ஒன்றாகக் கருதப்படும் இந்த பெராரி காரின் சில முக்கிய தகவல்கள் பற்றி பார்ப்போம். இதன் இன்ஜின்: 6.5 லிட்டர் V12 இன்ஜின், 830 ஹார்ஸ்பவர் திறன் கொண்டது. வேகம்: 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கி.மீ ஆகும். உள் அலங்காரம்: ட்ரிபிள் டிஸ்ப்ளே செட்டப் மற்றும் 1600 வாட் பர்மெஸ்டர் (Burmester) சவுண்ட் சிஸ்டம் என ஒரு நடமாடும் இசை அரங்கம் போலவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
