இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான லடாக் பகுதிக்கு பைக்குகளில் சுற்றுலா சென்ற இந்திய இளைஞர்கள் குழுவிற்கு, அவர்களின் ஸ்மார்ட்போன்கள் மூலம் முற்றிலும் எதிர்பாராத ஒரு தொழில்நுட்ப அதிர்ச்சி காத்துள்ளது. லடாக்கின் அழகிய நிலப்பரப்புகளை ரசித்துக் கொண்டே, அவர்கள் இந்திய-சீன எல்லைக்கு மிக அருகில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் பயணம் செய்துள்ளனர். அப்போது தங்களின் மொபைல் போன்களை எடுத்துப் பார்த்த பல ரைடர்கள், அதில் காட்டிய நேரத்தைக் கண்டு அப்படியே குழப்பத்தில் உறைந்து போயுள்ளனர்.

​அவர்களது மொபைல் போன்களில் காட்டிய இந்திய நேரம் (IST), திடீரென இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முன்னோக்கி நகர்ந்து, சீன நேரத்திற்கு (CST) தானாகவே மாறியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் மொபைலை உற்று நோக்கியபோது, அவர்களது போன்கள் தானாகவே எல்லையில் இருந்த சீன டெலிகாம் நெட்வொர்க் சிக்னல்களுடன் கனெக்ட் ஆகியிருப்பது தெரியவந்தது.

பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் நெட்வொர்க் சிக்னலுக்கு ஏற்ப நேரத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் ‘ஆட்டோமேட்டிக்’காக செட் செய்யப்பட்டிருப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. எல்லையோரப் பகுதியில் நடந்த இந்த விசித்திரமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.