திராவிட மாடல் அரசின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட “நான் முதல்வன்” உள்ளிட்ட சாதனைத் திட்டங்களின் பெயர்களை மாற்றுவதற்கு முயற்சிக்கும் தற்போதைய தவெக அரசுக்கு எதிராக திமுக தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. திட்டங்களின் பெயர்களை வேண்டுமானால் அழிக்கலாமே தவிர, வரலாற்றை யாராலும் தொடக்கூட முடியாது என்றும், போலியான மாற்றங்களால் உண்மையான வரலாற்றை துளிக்கூட மாற்றியமைக்க முடியாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களாலும், மாணவர்களுக்காகவுமே வடிவமைக்கப்பட்டவை என்று அதில் பெருமிதத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, “நான் முதல்வன்” திட்டத்திற்கான பெயர் தேர்வு செய்யப்பட்ட போது, ஐந்து விருப்பப் பெயர்களில் அது இடம்பெறவில்லை என்றும், மு.க.ஸ்டாலின் அவர்களே சிந்தித்து ஒவ்வொரு மாணவனும் முதலிடத்தை அடைய வேண்டும் என்பதற்காக இப்பெயரைப் பரிந்துரைத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் “புதுமைப்பெண் திட்டம்” என்ற பெயரை கல்லூரி மாணவிகளே வாக்களித்துச் சூட்டினார்கள் என்று குறிப்பிட்டுள்ள திமுக தரப்பு, “முதலமைச்சராக வேண்டும்” என்ற ஒரே அஜெண்டாவோடு வந்தவர்களுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் தெரியப்போவதில்லை என்று தவெக அரசைச் சாடியுள்ளது. மக்களுக்குப் புரியவில்லை என்கிற ரீதியில் மட்டம் தட்டிப் பேசி, இன்றைய ஆட்சியாளர்கள் திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைத்தால், மாணவர்களுக்காக ஜனநாயக முறையில் எதிர்க்கத் தயாராக இருப்போம் என்றும் அந்த அறிக்கையில் அதிரடியாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
