ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில், போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘தாய் ஸ்பா’ மையத்தின் உள்ளே எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ காட்சி, எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவில் மூன்று பேர் நிற்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதில் ஒருவர் ஹரியானா காவல் துறையின் சீருடையை அணிந்துள்ளார்; மற்றொருவர் வெள்ளைச் சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து செக்யூரிட்டி கார்டு போல காட்சியளிக்கிறார். இவர்களுடன் சிவப்பு நிற ஆடையும், கருப்பு நிற ஜீஸும் அணிந்த பெண் ஒருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Faridabad News (@faridabadnews.live)

காணொளியின் அடுத்தடுத்த காட்சிகளில், போலீஸ் சீருடையில் இருக்கும் அந்த நபர், அங்கிருக்கும் பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண்டே அவரது முடியை விலக்கி, கழுத்துப் பகுதியில் அநாகரீகமான முறையில் தொட்டு அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியுள்ளன. பின்னர் மற்றொரு நபரும் அவர்களது உரையாடலில் இணைகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், சீருடையில் இருக்கும் நபரின் இந்த மோசமான ஒழுக்கக்கேடான நடத்தைக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, அவர் மீது உடனடியாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும், தற்போதைக்கு இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து காவல் துறை தரப்பிலோ அல்லது பிற அமைப்புகளாலோ அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், வீடியோவில் இருக்கும் நபர்கள் யார், இது எப்போது, எந்த குறிப்பிட்ட இடத்தில் எடுக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களும் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.

வீடியோவில் இருப்பது உண்மையான போலீஸ் அதிகாரியா அல்லது காவல்துறை நற்பெயரைக் கெடுப்பதற்காகச் சீருடை அணிந்து யாரேனும் போலி நபர் நாடகமாடுகிறாரா? என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள போதிலும், ஹரியானா காவல் துறை தரப்பில் இதுவரை இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.