சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக நிறுவனங்களின் ‘நச்சுத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரம்’ (Toxic Work Culture) குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களின் மதிய உணவு இடைவேளை தொடர்பாக அந்த நிறுவனத்தின் முதலாளி வெளியிட்டுள்ள விசித்திரமான உத்தரவுதான் இந்த சர்ச்சைக்குக் காரணம்.
மின்னல் வேகத்தில் பரவி வரும் அந்த அறிவிப்பில், “ஊழியர்களுக்கு மதிய உணவு சாப்பிட 30 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். ஊழியர்கள் தங்களது மதிய உணவை இந்த 30 நிமிடங்களுக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 1 நிமிடம் கூடுதலாக எடுத்தால் கூட, சம்பந்தப்பட்ட ஊழியர் தனது ஷிப்ட் முடிந்த பிறகு (மாலை 6 மணிக்கு மேல்) கூடுதலாக 60 நிமிடங்கள் (1 மணி நேரம்) அலுவலகத்தில் தங்கி வேலை செய்ய வேண்டும்.
மிக முக்கியமாக, இந்த கூடுதல் வேலை நேரத்திற்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படாது” என்று மிகக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. @NalinisKitchen என்ற எக்ஸ் (X) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த நோட்டீஸ், தற்போது 1.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
If your management writes policies like this, don’t be surprised when your best employees write resignation emails. pic.twitter.com/3v5jZGA3XS
— Nalini Unagar (@NalinisKitchen) June 22, 2026
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களையும், ஆதங்கத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பயனர் ஒருவர், “ஊழியர்களும் இதே போன்ற ஒரு விதியை உருவாக்க வேண்டும்; அலுவலக நேரத்தில் 1 நிமிடம் கூடுதலாக வேலை செய்தால் கூட, அதற்குப் பதிலாக 1 மணி நேரத்திற்கான கூடுதல் சம்பளத்தை நிறுவனம் வழங்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
மற்றொரு பயனர், “நிறுவனங்கள் தங்களுக்கு விசுவாசமான ஊழியர்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன, ஆனால் ஊழியர்களோ தங்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்” என உருகியுள்ளார். இந்த நோட்டீஸைப் பார்க்கும் எவரும் இத்தகைய அடிமைத்தனமான நிறுவனங்களில் பணியாற்ற வேண்டாம் என்றும் ஊழியர்களுக்குப் பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
