திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே, சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்த பிரபலங்கள் பலர் உண்டு. அதே சமயம், சினிமாவையும் கைவிடாமல் அரசியலிலும் தடம் பதித்து ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த ஒருவர், பாஜகவில் இணைந்து வெறும் 24 மணி நேரத்திற்குள் தனது அரசியல் பயணத்தை முடித்துக் கொண்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் சேகர் சுமன். பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தான் பாஜவிலிருந்து விலகியதற்கான அதிர்ச்சி பின்னணியை உடைத்துப் பேசியுள்ளார்.
‘சேகர் டுநைட்’ நிகழ்ச்சியின் அறிமுக விழாவின் போது தனது குறுகிய கால அரசியல் பயணம் குறித்துப் பேசிய சேகர் சுமன், “நான் வெறும் 24 மணி நேரம் மட்டுமே அரசியல்வாதியாக இருந்தேன். என்னுடைய தவறை உணர்ந்த அடுத்த கணமே, நான் அரசியலில் இருந்து பின்வாங்கிவிட்டேன்” என்று வெளிப்படையாகக் கூறினார். வாழ்க்கையில் சில சூழ்நிலைகள் நம்மை எதிர்பாராத திசையில் திருப்பி விடுகின்றன என்று குறிப்பிட்ட அவர், தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த தருணத்தில், ஆழமாக யோசிக்காமல் அவசரமாக பாஜகவில் இணையும் முடிவை எடுத்ததாகக் கூறினார்.
மேலும், தான் விரும்பாத சில விஷயங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட்டது குறித்தும் பேசிய சேகர் சுமன், “அப்போதும் எனக்கு வேறு வழியில்லை, தேர்தலில் போட்டியிட எனக்கு துளியும் விருப்பமில்லை. நான் ஏன் அப்படிச் செய்தேன் என்று இன்றளவும் எனக்கே புரியவில்லை. ஆனால் அது ஒரு தற்காலிகமான கட்சி சேர்க்கை மட்டுமே, முழு நேர அரசியல் பயணம் அல்ல” என்று விளக்கமளித்துள்ளார்.
