தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களின் பேராதரவோடுதான் த.வெ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, தி.மு.க.வின் தயவால் அல்ல. சிலர் இந்த ஆட்சியை ‘சோபா மாடல்’ ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள்; அந்த வார்த்தையின் அர்த்தம் புரிவதற்கே எனக்குப் பல நாட்கள் ஆனது. இதுபோன்ற ‘ஷோபா செட்’, பர்னிச்சர் வியாபாரங்களை எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளுங்கள், சட்டசபைக்குள் வேண்டாம்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், த.வெ.க ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஊழலில் ஊறிப்போனவர்கள் ஒருபோதும் ஆட்சி, அதிகாரத்தில் மற்றவர்களுக்குப் பங்கு தரமாட்டார்கள் என்றும், கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத் த.வெ.க அரசு செய்யாது என்றும் உறுதியளித்தார். மக்கள் பணத்தைத் தொட மாட்டோம், யாரையும் தொட விடமாட்டோம், மீறித் தொட்டவர்களை சும்மா விடமாட்டோம் என முழங்கிய அவர், 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் தொகுதி இந்த ஆட்டம் ஆடுகிறது என்று தி.மு.க-வினரை விமர்சித்தார்.

தொடர்ந்து மத்திய அரசுடனான உறவு மற்றும் கொள்கை நிலைப்பாடு குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “தற்போதைய மத்திய அரசைச் சார்ந்த கட்சியுடன் கொள்கை அளவில் நாம் நேரெதிராக நிற்பவர்கள்தான். அதே நேரத்தில், எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் வீணான மோதல் போக்கை உருவாக்க நாம் விரும்பவில்லை. நமக்கு எப்போதுமே தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மட்டும்தான் முக்கியம். அதற்காக மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மக்களுக்கோ, சிறுபான்மைச் சகோதரர்களுக்கோ அல்லது நமது ஆதரவு இயக்கங்களுக்கோ இதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்; நாம் யாருடைய ‘பி’ டீமும் (B-Team) இல்லை, நாம் தூய்மையான மக்கள் டீம் (Pure People’s Team)” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, அவரது பேச்சுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு, பின்னர் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.