மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில் வளாகத்தில், இந்து தோழியுடன் தரிசனம் செய்ய வந்த முஸ்லிம் வாலிபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபர் தனது இந்து மத தோழியுடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது அந்த வாலிபரின் நெற்றியில் சந்தனத் திலகம் இடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அங்கிருந்த சில அமைப்பினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​இந்த வாக்குவாதம் திடீரென முற்றவே, அங்கிருந்த விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த சிலர், அந்த வாலிபரை கோவில் வளாகத்திற்குள்ளேயே வைத்து கொடூரமாக தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பும், பக்தர்களிடையே பயமும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், நிலைமையைச் சீர்செய்து வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.