பிரபல ஹாரர் திரைப்படமான ‘அப்செஷன்’ (Obsession) படத்தின் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் வெளியிட்ட டுரெக்ஸ் பாகிஸ்தான் (Durex Pakistan) நிறுவனம், தற்போது இணையவாசிகளின் கடுமையான கண்டனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகியுள்ளது. வெறும் 7.5 லட்சம் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் 250 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்த இந்த ஹாரர் படத்தில், ‘பியர்’ என்ற கதாபாத்திரத்திற்கு ‘ஒன் விஷ் வில்லோ’ என்ற மந்திரப் பொருள் கிடைக்கிறது.

அதை வைத்து, தன் சிறுவயது தோழியான ‘நிக்கி’ தன் மீது பைத்தியமாக மாற வேண்டும் என அவன் ஆசைப்படுகிறான். அந்த மந்திரத்தால் நிக்கியின் எண்ணங்கள் கட்டுப்படுத்தப்பட்டு, அவளது சம்மதம் இல்லாமலேயே பியர் மீது வெறித்தனமான காதல் ஏற்பட்டு, சுயநினைவை இழந்து தவிக்கும் கொடூரமான கதைக் களத்தைக் கொண்டது இப்படம்.

ஆனால், டுரெக்ஸ் நிறுவனம் இந்த ஹாரர் படத்தின் பின்னணியை தவறாகப் புரிந்து கொண்டு, அந்த மந்திரப் பொருளின் அருகில் தங்கள் தயாரிப்பை வைத்து, “அவளை உங்கள் மீது வெறி கொள்ளச் செய்யுங்கள்” (Make her obsessed with you) என்ற கேப்ஷனுடன், பெண்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக “ஃப்ரீக்கி நிக்கி” (Freaky Nikki) எனக் குறிப்பிட்டு விளம்பரம் செய்தது. சம்மதம் இல்லாத பாலியல் உணர்வுகளைத் தூண்டும் ஒரு திகில் படத்தை, இப்படி ஜோக் போல மாற்றி விளம்பரம் செய்ததால் நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

“பாதுகாப்பான மற்றும் இருதரப்பு சம்மதத்துடனான உடலுறவை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச பிராண்ட், சம்மதமே இல்லாத ஒரு கொடூரமான சூழலை விளம்பரப்படுத்துவதா?” எனப் பலரும் “அசிங்கம்” என்று திட்டித் தீர்த்து வருகின்றனர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து டுரெக்ஸ் இந்த விளம்பரத்தை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கியுள்ள போதிலும், இதன் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.