நியூயார்க்கைத் தளமாகக் கொண்டு பல மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வரும் ஹேமாக்ஷி மோட்கா என்ற பெண் தொழிலதிபர், தான் இவ்வளவு சாதித்தும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதற்காக அவரது பாட்டி வருத்தப்பட்டதாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடந்த ஒரு பாரம்பரிய விழாவில், திருமணமான மகள்களுக்கு மட்டுமே கம்பளிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.

ஹேமாக்ஷிக்கு திருமணம் ஆகாததால் அவரது பாட்டியால் அந்தக் கம்பளியைப் பெற முடியாமல் போனது. இதனால் வருத்தமடைந்த பாட்டி, தனது ஆதங்கத்தை ஹேமாக்ஷியிடம் கொட்டியுள்ளார். இதை நகைச்சுவையுடன் விவரித்த ஹேமாக்ஷி, “நியூயார்க்கில் பல மில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்துகிறேன், 42 கிலோமீட்டர் மாரத்தான் ஓடியுள்ளேன்; ஆனால் ஒரு சாதாரண கம்பளிக்கு முன்னால் எனது இத்தனை சாதனைகளும் தோற்றுவிட்டன” என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Hemakshi Motka (@hemakshi126)

இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொண்ட ஹேமாக்ஷி, பெண்கள் திருமணத்திற்காகத் தங்களின் சுய அடையாளத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். மற்றவர்களின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதை விட, சுயமரியாதையுடன் சொந்தமாகச் சம்பாதித்து, நமக்குப் பிடித்த வாழ்க்கையை உருவாக்குவதே உண்மையான கெத்து என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “அடுத்த முறை நீங்களே ஒரு விழா நடத்தி, திருமணமாகாத பெண்களுக்கு கம்பளி கொடுத்து புது ட்ரெண்டை உருவாக்குங்கள்” என்றும், “பாட்டிகள் வாழ்ந்த காலம் வேறு, அவர்கள் இலவச கம்பளிக்காக உங்களை உசுப்பேற்றுகிறார்கள், அதைத் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றும் கமெண்ட் செய்து சிரித்து வருகின்றனர்.