தமிழக சட்டப்பேரவையின் புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் ஆற்றிய உரையை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த உரையில் எந்த மாற்றமும் இன்றி ஆளுநர் வாசித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஆளும் தவெக மற்றும் பாஜக இடையிலான மறைமுகக் கூட்டணியை உறுதிப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என்றும், மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும், தனது தோல்விகளை மறைக்க திமுக மீது பழிபோடுவதாகவும் அவர் சாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையையும் பாதுகாப்பின்மையையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
அமைச்சர்கள் முதல் அக்கட்சியின் சமூக வலைதளப் பொறுப்பாளர்கள் வரை அனைவரும் நிஜமான பணிகளைச் செய்யாமல், ரீல்ஸ் வீடியோக்களைப் போடுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“நிஜமான உலகிற்கு எப்போது வரப்போகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், திமுக மீது பழிபோடுவதையும், அவதூறு பரப்புவதையும் மட்டுமே தவெகவினர் வேலையாகக் கொண்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
