உக்ரைன்-ரஷியா போர் மூன்றாவது ஆண்டிலும் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதே நேரத்தில், “ரஷ்யா எந்த நேரத்திலும் தாக்குதல் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது” என ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

குறிப்பாக பிரான்ஸ், 2026 மார்ச் மாதத்திற்குள் போருக்கான நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, நாடு முழுவதிலுள்ள மருத்துவமனைகளுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை பராமரிக்க தேவையான கட்டமைப்புகளை முன்னதாக தயார் செய்யும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜெர்மனி அரசு ரஷ்ய இராணுவ பயிற்சிகளை கவனமாக கவனித்து வருகிறது என்றும், தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தனது பதிலை வெளியிட்டுள்ளார்.

அதில், “ரஷ்யா ஒரு நாள் ஐரோப்பாவை தாக்கும் என பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் போலி கதை பரப்புகின்றன. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை எதிர்க்கும் மனப்பான்மை எங்களிடம் இல்லை” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.