பெய்ஜிங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே நடந்த தனிப்பட்ட உரையாடல் தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

அணிவகுப்பிற்கு நடந்து செல்லும் போது, தவறுதலாக செயல்பட்ட மைக் வழியாக அவர்கள் உரையாடல் வெளிவந்துள்ளது. இதில், “முந்தைய காலத்தில் மக்கள் 70 வயதைத் தாண்டி வாழ்வது அரிது. ஆனால் இன்று, 70 வயதில் கூட இளமையாக இருக்கிறீர்கள்” என ஜி ஜின்பிங் கூற, அதற்கு பதிலளித்த புதின், “மனித உறுப்புகளை மாற்றும் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியால், இனிமேல் நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோமோ, அவ்வளவு இளமையாகவே இருக்க முடியும். இறவாமையும் சாத்தியமாகும்” என கருத்து தெரிவித்தார்.

இதனையடுத்து, மனித ஆயுள் 150 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதா? என்ற கேள்வி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனும் அவர்கள் அருகில் இருந்தபோது இந்த உரையாடலைக் கேட்டு சிரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில், உரையாடலை உறுதிப்படுத்திய புதின், “தொழில்நுட்ப முன்னேற்றம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவை சிகிச்சையின் மேம்பாட்டால், மனிதர்கள் எதிர்காலத்தில் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட வாழ்க்கையை வாழ முடியும்” என தெரிவித்துள்ளார். இவர்களின் உரையாடல், அறுவை சிகிச்சையின் மூலம் இறவாமையை அடைய முடியும் என்ற புதிய கோணத்தில் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.