தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழத் தோட்டம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார்கள். இதில் சிவரஞ்சனி குடும்ப வறுமை காரணமாக மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பாலசுப்பிரமணியம் குழந்தையை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான பாலசுப்பிரமணியம் அடிக்கடி தன்னுடைய மகளை துன்புறுத்தியுள்ளார்.

அவர் வேலைக்கு செல்லாததால் மது குடிக்க பணம் இல்லாமல் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் குழந்தையின் கையை பிளேடால் வெட்டியும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்து தன் மனைவிக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளார். இதனால் சிவரஞ்சனி சமூக ஆர்வலர்களிடம் தன் குழந்தை படும் கஷ்டத்தை அங்கிருந்து எடுத்துக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு காப்பகத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் இதைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியத்தை காவல்துறையினர் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.