உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர்.
தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் மிதிலேஷ் பலமுறை கூறியும், அவரது பெற்றோர் அவரை அடித்துத் துன்புறுத்தி மிரட்டி இந்தத் திருமணத்தை நடத்தி முடித்தனர்.
திருமணச் சடங்குகள் முடிந்து முதலிரவு அறைக்குச் சென்றபோது, மிதிலேஷ் தனது காதல் விவகாரத்தையும், கட்டாயத் திருமணத்தையும் கணவரிடம் அழுதுகொண்டே விவரித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் சிங், மனைவியின் நிலையைப் புரிந்து கொண்டு அவருக்கு உதவ முன்வந்தார். இது குறித்துத் தனது குடும்பத்தினரிடமும், காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் முன்னிலையில் இரு வீட்டாரும் நடத்திய பேச்சுவார்த்தையில், மிதிலேஷ் தனது காதலனுடன் வாழ்வதிலேயே உறுதியாக இருந்தார்.
இதையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் சிங் தனது மனைவியை விவாகரத்து செய்து காதலனுடன் சேர்த்து வைக்கச் சம்மதித்தார். ஒரே நாளில் முடிவுக்கு வந்த இந்த விசித்திரத் திருமணம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
