கர்நாடக மாநிலம் யாத்கிரியில், மகன் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயலுக்காகத் தாய் தனது உயிரையே விலையாகக் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிநகரைச் சேர்ந்த 42 வயது கமலம்மாவின் மகன் எரிசாமி, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, ‘ஷில்லேக்யாதா’ இனத்தைச் சேர்ந்த ஊர் தலைவர்கள் அந்தக் குடும்பத்தையே சமூகப் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
”யாரும் அந்தக் குடும்பத்திடம் பேசக்கூடாது, 10 ஆண்டுகள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும், 50 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்” எனத் தாலிபான் பாணியில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் தொழிலுக்கும் தடை விதிக்கப்பட்டதால், மனமுடைந்த கமலம்மா ஜோலதடகி பாலத்தில் தனது தாலியை கழற்றி வைத்துவிட்டு பீமா ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு மகனின் செயலால், ஒரு தாயின் உயிர் அநியாயமாகப் பறிபோயிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது!
