உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், ஹோட்டல் அறையில் தனது மனைவியைக் காதலனுடன் கையும் களவுமாகப் பிடித்த கணவன், போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களைக் கைது செய்ய வைத்துள்ளார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, புலந்த்சாகர் மாவட்டம் குலாவதி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார். இவர் அலிகாரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு தனது மனைவியைப் பார்த்த ஆகாஷ், சந்தேகத்தின் பேரில் அவரைத் ரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
அவரது மனைவி, மிருதுள் என்கிற நிகில் என்ற இளைஞருடன் ராம்நாட் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்குச் சென்று, அங்குள்ள 302-ஆம் எண் அறையை முன்பதிவு செய்து உள்ளே சென்றுள்ளார். உடனடியாக ஆகாஷ் குமார் போலீஸாருக்குத் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குவார்சி காவல் நிலையப் போலீஸார், அந்த அறையைத் திறக்கச் செய்தபோது, மனைவியும் அவரது காதலனும் அங்கிருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்த விசாரணையில் ஆகாஷ் குமார் தெரிவித்ததாவது, “எங்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால், எனது மனைவிக்கு இந்த இளைஞருடன் நீண்ட நாட்களாகத் தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு, என் மீது வரதட்சணைக் கொடுமை செய்ததாகப் பொய்யான புகாரை அவர் அளித்துள்ளார். திருமணத்திற்காக ரூ. 15 லட்சம் செலவு செய்ததாக நீதிமன்றத்தில் அவர் பொய்யாகக் கூறி வருகிறார். ஆனால், எங்கள் திருமணம் காதலித்துச் செய்துகொண்டது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி மற்றும் காதலன் ஆகிய மூவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் புகாரின் உண்மைத்தன்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
