கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் போதை ஆசாமி ஒருவன் கத்தியுடன் சுற்றித்திரிந்து அட்டகாசம் செய்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அன்னை இந்திரா நகர் பகுதியில் வலம் வரும் இந்த நபர், தன்னைப்பார்த்து குரைக்கும் தெரு நாய்களைக் கத்தியால் குத்த முயல்வதும், அங்குள்ள பெண்களை மிரட்டுவதுமாகச் சுற்றி வருகிறான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் அந்த நபரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். ஆனால், போலீஸ் கொடுத்த எச்சரிக்கையைச் சற்றும் மதிக்காத அந்த ஆசாமி, மீண்டும் அதே பகுதியில் கத்தியுடன் உலா வருவது பொதுமக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிய பிறகும் அந்த நபர் மீண்டும் ஆயுதத்துடன் சுற்றித் திரிவதால், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சி வருகின்றனர். “போலீஸ் சொல்லியும் அவன் கேக்கலையே, அடுத்து யாரையாவது குத்திடுவானோ?” என்று அப்பகுதி மக்கள் பயப்படுகின்றனர். சிங்காநல்லூர் போலீசார் வெறும் எச்சரிக்கையோடு நிறுத்தாமல், ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக அந்த நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே ஒண்டிப்புதூர் மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.