ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயில்கள் வந்து செல்கின்றது. இதே நேரத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தின் வழியாக வந்து செல்கின்றது.

அதிலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களின் மூலமாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடந்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் ரயில்வே போலீசார் ஈரோடு வழியாக செல்லும் ரயில்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். மேலும் ஈரோடு ரயில் நிலையத்திலும் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் கல்கத்தாவில் இருந்து நாகர்கோயில் செல்லும் ரயிலில் போலீசார் முன்பதிவில்லா பெட்டியில் சோதனை மேற்கொண்ட போது அங்கு ஒரு சாக்கு பை கிடந்தது. அதனை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் சுமார் 6.50 கிலோ எடையுள்ள போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அந்த போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் அது எங்கிருந்து யார் கொண்டு வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று ஈரோடு குயவன்திட்டு பகுதியிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பெயரில் நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அங்கு நின்று‌ கொண்டிருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் மரப்பாலத்தை சேர்ந்த முகேஷ்(23) என்பதும் அவர் அந்த பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 3.450 கிலோ எடையுள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்களை குறி வைக்கும் விதமாக வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரும் கும்பல் அதிகரித்து வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பினை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.