உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள மோர்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயந்த் தியாகி. இவருக்கு எதிர்பாராதவிதமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகிய இரண்டு உறுப்புகளும் செயலிழந்ததால், அவரது உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. மருத்துவர்கள் உடனே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது இரண்டு மகள்களும் தந்தையைக் காப்பாற்ற முன்வந்தனர். பி.டெக் படித்து முடித்துள்ள மூத்த மகள் ரிஷிகா தியாகி தனது ஒரு சிறுநீரகத்தையும், பி.டெக் முதலாண்டு படிக்கும் இளைய மகள் குஷி தனது கல்லீரலின் ஒரு பகுதியையும் தங்களது தந்தைக்குத் தானமாக வழங்க முடிவு செய்தனர்.
இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், மூத்த மகள் ரிஷிகாவிற்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவிருந்தது. இருந்தபோதிலும், அவர் தந்தையின் உயிரைக் காப்பதே முக்கியம் என உறுதியாக நின்றார். இந்த முடிவிற்கு அவரது வருங்காலக் கணவர் முழு ஆதரவு அளித்து அவரை ஊக்கப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் மிகவும் சவாலான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர்.
தற்போது தந்தையும் அவரது இரண்டு மகள்களும் நலமாக உள்ளனர். தந்தையர் தினத்திற்கு முன்னதாக, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தந்தைக்கு மறுவாழ்வு அளித்த இந்த இரண்டு மகள்களின் தியாகத்தையும், தைரியத்தையும் ஒட்டுமொத்த சமூகமும் பாராட்டி வருகிறது.
