தெலுங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தில் உள்ள கே.சி.ஆர் நகர் குடியிருப்பில், பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் கடுமையான உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை அப்பகுதிக்கு வந்த ஒரு நடமாடும் வாகனத்தில் குழந்தைகள் ஆசையாக பானிபூரி வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.

மேலும் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, பேதி மற்றும் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள், குழந்தைகளை உடனடியாக சிர்சில்லாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றனர்.

இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ரிஷிகேஷ் என்ற சிறுவனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவனுக்கு கடுமையான காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டதால், மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக மற்ற 17 குழந்தைகளின் நிலைமை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்தப் பானிபூரி வண்டியில் இருந்த உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வக சோதனைக்கு அனுப்பியுள்ளனர். தண்ணீர் அல்லது ஏதேனும் நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.