கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாதேவ் அண்ட் சன்ஸ்’ (Mahadev & Sons) என்ற இந்தி மெகா தொடர், காதல் என்ற பெயரில் வன்முறையையும், உடல் ரீதியான சித்திரவதையையும் காட்டியதாகக் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தத் தொடரின் சமீபத்திய எபிசோடில், கதாநாயகன் தீரஜ், கதாநாயகி ரஜ்ஜியை கன்னத்தில் அறைந்து, பனி கட்டிகள் நிறைந்த தண்ணீரில் தள்ளிவிட்டு, இஸ்திரி பெட்டியால் கையை சுட வைப்பது போன்ற கொடூரமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், அவளிடம் தனக்கு வெறுப்பு மட்டுமே இருப்பதாகக் கூறி, கட்டாயப்படுத்தி காதல் செய்வதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வீடியோ கிளிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

“முன்பு காலம் வேறாக இருந்தது, ஆனால் இப்போது மக்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டனர்; காதல் என்ற பெயரில் சீரியல்களில் காட்டப்படுவது அப்பட்டமான அராஜகம் மற்றும் குடும்ப வன்முறை” என்று நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர். டிஆர்பி (TRP) ரேட்டிங்கிற்காக இதுபோன்ற ஆபத்தான காட்சிகளை வைக்க வேண்டாம் என சீரியல் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தத் தொடரில் நேஹா ராணா, கர்விதா சாத்வானி, சினேகா வாக், சக்தி ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக, இந்தத் தொடரில் நடித்து வந்த பிரபல நடிகை மானசி சால்வி திடீரென இதிலிருந்து விலகியதால் ஏற்கனவே ஒரு சர்ச்சை நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.