‘சர்ஜரி நடக்கும் நாளிலும் வேலை செய்’ என்று பாஸ் கட்டாயப்படுத்தியதால், மன உளைச்சலுக்கு ஆளான ஊழியர் ஒருவரின் கதை தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
மேலும் அறுவை சிகிச்சை போன்ற அவசர மருத்துவ நிலையிலும் கூட, மனிதாபிமானமே இல்லாமல் வேலை செய்யச் சொன்ன மேலதிகாரியின் வாட்ஸ்அப் அரட்டையை அந்த ஊழியர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, அந்த நிறுவனத்தின் மோசமான வேலை கலாச்சாரத்தை வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். “இது போன்ற சுரண்டல்களை சகித்துக் கொள்ளக் கூடாது, உடனடியாக மனிதவள மேம்பாட்டுத் துறையிலோ அல்லது தொழிலாளர் நல வாரியத்திலோ அதிகாரப்பூர்வமாகப் புகார் அளியுங்கள்” என்று நெட்டிசன்கள் அந்த ஊழியருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நச்சுத்தன்மை வாய்ந்த இத்தகைய வேலைச் சூழலில் இருந்து உடனடியாக விலகுவதே நல்லது என்றும், ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு மதிப்பளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
