மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென அடுத்தடுத்து நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதால் பொதுமக்கள் கடும் பீதியிலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர். நாசிக் மாவட்டத்திற்கு உட்பட்ட திண்டோரி, நிஃபாட், பேத், சுர்கானா மற்றும் இகத்புரி ஆகிய தாலுகாக்களில் நிலத்திற்கு அடியில் இருந்து பயங்கர சத்தத்துடன் இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
அமைதியாக உறங்கச் செல்ல ஆயத்தமான வேளையில், திடீரென வீடுகளும் பாத்திரங்களும் அதிரத் தொடங்கியதால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயினர். அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டதால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அழைத்துக்கொண்டு வீடுகளை விட்டு அலறியடித்து வெளியேறினர்.
அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடுமோ என்ற பயத்தில் நள்ளிரவு நேரத்தில் வீடுகளுக்குச் செல்லத் தயங்கி, திறந்தவெளிகளிலும் வீதிகளிலும் திரண்டு இரவைக் கழித்தனர். குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளில் பூமிக்கு அடியில் எழுந்த உரத்த சத்தம் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.
இந்தத் திடீர் நிலநடுக்க அதிர்வுகளால் இதுவரை பெரிய அளவிலான உயிர்ச்சேதமோ அல்லது சொத்துச் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், தொடர்ந்து அதிர்வுகள் வருமோ என்ற பயம் மக்களிடையே நீடித்து வருகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் மாவட்ட நிர்வாகமும் வருவாய்த் துறையினரும் நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் யாரும் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றும், நிலநடுக்கத்தின் போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
