மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஈஷ்வர்பூர் பகுதியில் வரதட்சணை வெறியால் 21 வயதே ஆன கர்ப்பிணிப் பெண் ஒருவர் அடித்துக் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னிபானு மெஹபூப் கான் என்ற அந்த இளம்பெண், தன் வயிற்றில் ஒரு உயிரைச் சுமந்து கொண்டிருந்த நிலையிலும், புகுந்த வீட்டின் வரதட்சணை அரக்கத்தனத்தில் இருந்து தப்ப முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கூடுதல் வரதட்சணையாக இரண்டரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு கணவனும் அவரது குடும்பத்தினரும் முன்னிபானுவைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளனர். சம்பவத்தன்று இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த புகுந்த வீட்டினர் அவரைத் கொடூரமாகத் தாக்கியதுடன், கழுத்தை நெரித்தும் கூர்மையான ஆயுதத்தால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

கொலை செய்த கையோடு, முன்னிபானுவின் சகோதரனுக்கு போன் செய்த கொலையாளிகள், “உன் தங்கை கதையை முடித்துவிட்டோம், வந்து பிணத்தை எடுத்துக்கொண்டு போ” என்று எவ்வித பயமும் கூச்சமும் இன்றி மிரட்டும் பாணியில் கூறியுள்ளது அனைவரையும் உரைய வைத்துள்ளது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஈஷ்வர்பூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சணை என்ற பெயரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணையும், பிறக்காத ஒரு உயிரையும் பலிவாங்கிய இந்த மனித மிருகங்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்களும், பெண்ணின் குடும்பத்தினரும் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.