அமைதியான இரவில், தங்களின் கனவுகளைச் சுமந்து கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடரும் மாணவி ஒருவருக்கு நேர்ந்த நயவஞ்சகமான செயல், ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அகமதாபாத் நகரின் மையப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், தங்கும் விடுதிகளின் பாதுகாப்பை கேள்விகுறியாகியுள்ளது.

அதாவது குஜராத் பல்கலைக்கழகத்தில் இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் 23 வயது இளம் மாணவி ஒருவர், ஆனந்த்நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில், வழக்கம்போல விடுதியின் மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சிக்குச் சென்றுள்ளார் அந்த மாணவி.

அப்போது மாணவி மாடியில் இருப்பதை நோட்டமிட்ட அந்த விடுதியின் பாதுகாப்பு காவலர் தர்மசிங், அங்கு வந்து அவரிடம் அத்துமீற முயன்றுள்ளான். இதனால்  அதிர்ந்துபோன மாணவி அங்கிருந்து தப்பியோட முயன்றபோது, கொடூரமான அந்த நபர் மாணவியின் கழுத்தில் இரும்புக் கம்பியை மாட்டி பலமாக இறுக்கியுள்ளான்.

இதனால் மாணவியால் சத்தம் கூட போட முடியவில்லை. மூச்சுத் திணறிக் கிடந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாருமில்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அந்த மிருகம் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தாக்குதலுக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய அந்தப் பாவி சென்ற வேகத்தில், மாணவி மிகுந்த சிரமத்திற்கிடையே மாடியில் இருந்து கத்தி கீழே இருந்த குடியிருப்புவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்களும், விடுதி நிர்வாகத்தினரும் உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் உடனடியாகப் புகாரளிக்கப்பட்டது. குற்றவாளியின் கொடூரச் செயலால் கொதித்தெழுந்த அகமதாபாத் குற்றப்பிரிவு மற்றும் உள்ளூர் காவல்துறையினர், உடனடியாக களத்தில் இறங்கினர். குற்றவாளியை எப்படியும் கூண்டோடு பிடிக்க வேண்டும் என்பதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி தர்மசிங் லிப்ட் மூலமாக மாடிக்குச் செல்லும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகியிருந்தன. அந்தத் தடயங்களைக் கொண்டு போலீசார் மேற்கொண்ட மின்னல் வேக நடவடிக்கையில், கொடூரக் குற்றவாளி சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டான்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. குற்றவாளி தர்மசிங், உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவன் அந்தத் தங்கும் விடுதியில் பாதுகாப்பு காவலராக வேலைக்குச் சேர்ந்து வெறும் சில நாட்கள்தான் ஆகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.

விடுதிகளில் பணிக்கு அமர்த்தப்படும் பாதுகாப்பு காவலர்களை வேலைக்கு எடுக்கும் ஏஜென்சிகள், முறையான பின்னணி சரிபார்ப்பு  மற்றும் காவல்துறை சரிபார்ப்பு போன்ற விதிகளை முறையாகப் பின்பற்றினார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.