திரைத்துறை நட்சத்திரங்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் இடையே காதல் வதந்திகள் பரவுவது புதிதல்ல என்றாலும், சமீபத்தில் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள் தாக்கூர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமான யஷஸ்வி ஜெயஸ்வால் ஆகிய இருவரையும் இணைத்து பரப்பப்பட்ட வதந்தி இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மும்பை பாந்த்ராவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருவரும் தனித்தனியாக வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக வதந்திகள் வேகமாகப் பரவத் தொடங்கின.

இந்த வதந்திகள் எல்லை மீறிச் சென்ற நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் இதற்கு நேரடியாகவே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வதந்தியைப் பரப்பிய சமூக வலைதளப் பதிவின் கமெண்ட் பகுதியில் நேரடியாகப் பதிலளித்த அவர், “கொஞ்சம் நிதானியுங்கள் சகோதரரே! நாங்கள் இருவரும் எங்கே ஒன்றாக இருந்தோம்? படித்த மனிதர்களான நீங்கள் அனைவரும் இதுபோன்ற வீண் வதந்திகளை எப்படி உண்மையென்று நம்பத் தொடங்குகிறீர்கள் என்று தெரியவில்லை.

நாட்டில் பேச வேண்டிய எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஜென் ஜி தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொண்டு சரியான விஷயங்களைப் பற்றி வீடியோ உருவாக்குங்கள், அது உங்களுக்கு அதிகமான பார்வைகளைப் பெற்றுத் தரும்” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே கடந்த காலத்தில் நடிகர் தனுஷுடன் இணைத்துப் பேசப்பட்ட வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்த மிருணாள் தாக்கூர், தற்போது மீண்டும் ஒரு அடிப்படை ஆதாரமற்ற காசாய் பரப்பப்பட்ட தகவலுக்குத் தன் பாணியில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபலங்கள் பொது இடங்களில் தென்படுவதை மட்டுமே வைத்துக்கொண்டு, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தவறான தகவல்களைப் பரப்புவதை ஊடகங்களும் ரசிகர்களும் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியுள்ளது.