பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ள நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அன்புமணியை நேற்று ராமதாஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இது ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நிலையில் இன்று விழுப்புரம்–திண்டிவனம் சாலையில் அமைந்துள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில், பா.ம.க. செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கியதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அதனை அன்புமணி தரப்பினர் நடுநிலை மீறல் எனக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதன்படி, “ராமதாசுக்கு அன்புமணியை நீக்க எந்த அதிகாரமும் இல்லை” என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு வெளியிட்ட கருத்தும், இரு தரப்பினரிடையே பதற்றத்தை அதிகரித்தது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி, வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, வன்னியர் சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில் அன்புமணி பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட, தகவல் அறிந்த அன்புமணி ஆதரவாளர்கள் விரைந்து வந்தனர். அந்த இடத்தில், அலுவலகத்தை திறக்கக் கோரி வாக்குவாதம் நடைபெற்றது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இது பாமக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
