சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார ரெயில்கள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் செல்கின்றனர். இந்நிலையில், சில பயணிகள் மேற்கொள்ளும் ஒழுக்கமற்ற செயல்கள், மற்ற பயணிகளுக்கு சிரமத்தையும், பாதுகாப்பு சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “புறநகர் ரெயில்களில் சில பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைத்திருப்பது பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் அந்த இருக்கைகள் அசுத்தமாகின்றன. இது, பிற பயணிகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.”
ரெயிலில் சிலர், தங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்காக இடங்களை முன்பதிவு செய்யும் நோக்கில், முன்பே இருக்கைகளை பிடித்து வைத்திருப்பதும், முதலில் வருபவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும் நிலையை உருவாக்குகிறது எனவும் தெற்கு ரெயில்வே கவலை தெரிவித்துள்ளது.
அதேபோல், சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன், இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல், பெட்டியின் நுழைவாயிலில் அமருவதால், ஏறும் மற்றும் இறங்கும் பயணிகள் இடையே பெரும் சிரமம் ஏற்படுகிறது. இது பாதுகாப்புக்கே பாதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடும் ரெயிலில் ஏறும் பழக்கமும் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது, பிற பயணிகளுக்குத் தடையாக மட்டுமின்றி, அந்த நபருக்கே விபத்து ஏற்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது.
“ரெயிலில் உள்ள இடங்களை ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் பயன்படுத்த வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடித்தல், இருக்கை மீது கால்கள் வைப்பது, அல்லது வாசலில் அமர்வது போன்ற செயல்கள் தண்டனைக்குரியவை. இதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரெயில்வே நிர்வாகம், “பயணத்தின் போது ஒழுங்கும், ஒத்துழைப்பும் முக்கியம். பொதுமக்கள் அனைவரும் இதை உணர்ந்து, புறநகர் ரெயில் பயணத்தில் பங்கேற்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.
