தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் சுற்றுப்பயணத்தை நாளை  தொடங்கவுள்ளார். ‘தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்’ என்ற பெயரில் திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணம், திருச்சி சத்திரம் பகுதியில் ஆரம்பமாகி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறியதாவது: “விஜய் திருச்சியில் பேசுவதற்கு 10 நிமிடம் தான் கேட்டிருக்கிறார். அதற்கும் அரசு 5 நிமிடம் கூடுதலாக அனுமதி கொடுத்திருக்கிறது. அந்த 15 நிமிடப் பேச்சுக்காகவே சனிக்கிழமைகள் தோறும் மனப்பாடம் செய்து, நடித்து பார்க்கிறாராம். அதற்கே அவர் வெறும் சனிக்கிழமைகளில் மட்டும் தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறார்.”

“வேட்டைக்கு வருகிறாராம். நீ வேடிக்கை காட்ட வருகிறாய். நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமா இருக்கிறாய். கோட்பாடு அடிப்படையில்தான் அவரை எதிர்க்கிறேன். உறவு அடிப்படியில் அவரை என் அண்ணன், தம்பி என மறுக்கவோ சண்டை போடவோ எனக்கு எந்த விருப்பமும் இல்லை.” என்றார்.

மேலும் தமிழ்த் திரைப்பட நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள ‘தளபதி’ விஜய், கடந்த ஆண்டுகளில் பல்வேறு சமூக, கல்வி நிகழ்வுகளின் மூலமாக அரசியல் பயணத்திற்குத் தயார் ஆகி வருவதாக கூறப்பட்டு வந்தார். தற்போது, தனது ‘தவெக’ கட்சியின் மூலம் அவர் நேரடியாக மக்களிடம் சென்று பிரசாரம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். விஜயின் சுற்றுப்பயணம் நாளை துவங்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.