பாகிஸ்தானில் இந்துப் பெண் ஒருவரை மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற வழக்கில், அப்பெண்ணை அவரது குடும்பத்தினருடன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரீட்டா என்ற 21 வயது பெண், கடந்த வாரம் அவரது வீட்டிலிருந்து மாயமானார்.
இது தொடர்பாக ரீட்டாவின் சகோதரர் ரவி சங்கர் அளித்த புகாரில், தனது சகோதரியை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றதாகக் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில், ரீட்டாவை பஞ்சாபின் குஜ்ரான்வாலா பகுதிக்கு அழைத்துச் சென்று, மதமாற்றம் செய்து நசீர் ஹுசைன் என்பவருக்குக் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரீட்டாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணையின் போது, ரீட்டாவை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க விசாரணை அதிகாரி கோரினார். ஆனால், ரீட்டாவின் வழக்கறிஞர்கள் இக்கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த ரீட்டா, தான் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பெற்றோர் வீட்டிற்கே செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதி, ரீட்டாவை அவரது சகோதரருடன் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, அங்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சிறுபான்மை இனப்பெண்கள், குறிப்பாக இந்துப் பெண்கள் கட்டாய மதம் மாற்றம் மற்றும் கட்டாயத் திருமண அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ளது.
