தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அப்பாவி மக்களிடம் லட்சக்கணக்கில் பணமோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்ட மர்மக் கும்பல், தங்களை முதலமைச்சர் விஜய்யின் அறக்கட்டளை நிர்வாகிகள் எனப் போலியாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

தொழில் தொடங்குவதற்கும், சிறு தொழில் கடன் பெறுவதற்கும் மற்றும் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கும் நிதியுதவி வழங்குவதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். ​இந்த நிதியுதவியைப் பெற வேண்டுமானால் முதற்கட்டமாகச் சரிபார்ப்புக் கட்டணம், பதிவுக் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் என பல்வேறு காரணங்களைக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தலா ரூ.1,000 முதல் ரூ.50,000 வரை பணத்தைப் பறித்துள்ளனர்.

பணத்தைச் செலுத்திய நீண்ட நாட்களுக்குப் பிறகும் எந்தவிதக் கடனோ அல்லது நிதியுதவியோ கிடைக்காததால் ஏமாற்றமடைந்த மக்கள், இந்தூர் குற்றத்தடுப்புப் பிரிவில் புகார்களை அளித்துள்ளனர். இதுவரை அரை டசனுக்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வப் புகார்கள் வந்துள்ள நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​தமிழ்நாடு முதலமைச்சரின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிற மாநிலத்தில் இந்த மோசடி அரங்கேறியுள்ளதால், இந்தூர் காவல் துறையுடன் இணைந்து தமிழ்நாடு காவல் துறையும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. மோசடிக்கு பயன்பட்ட தொலைபேசி எண்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைச் சைபர் கிரைம் போலிஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற போலி கடனுதவி அழைப்புகள் மற்றும் இணையவழி இணைப்புகளை (Links) நம்பி பொதுமக்கள் யாரும் பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களுக்குக் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.